ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, அந்த இளம் பெண்ணுக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் பிடிப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரிடம் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணை அவர் தான் தீயிட்டு எரித்தது தெரியவந்தது. ஏற்கனவே திருமணமான அவர் அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் தயாராக இல்லை. மேலும் அந்த இளம்பெண்ணும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமைந்த அந்த இளைஞர் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று தூங்கி கொண்டிருந்த அந்த பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் 19 வயது சிறுமி ஒருவர் காதலை நிராகரித்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட சுவடு மறைவதற்குள், தற்போது இளம் பெண் ஒருவர் அதேபோன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-இரா.நம்பிராஜன்