கோட்டகுப்பம் அருகே கடலில் மூழ்கி சிறுமி மாயம்!

கோட்டகுப்பம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுமி கடலில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படட்டது. இதையடுத்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த புனிதன் என்பவர் தன் மகள் உத்திகா ஸ்ரீ (14)  உடன் கோட்ட குப்பம் அருகே உள்ள கடற்கரைக்கு இன்று சென்றார்.

 

புனிதனின் மகள் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமி ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடல் அலை அவரை இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை அருகில் இருந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
பின்பு அங்கிருந்த மீனவர்கள் சிறுமியைத் தேடினர். வெகு நேரமாக தேடியும் சிறுமி கிடைக்காததால் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.