அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு… 20 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடம்!

விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  போட்டி நிறைவடைந்தது.

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன.14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் 9 சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி மாலை 6.15 மணியளவில் நிறைவடைந்தது. இதில் 20 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். அபி சித்தர் கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடமும், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடமும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 

அபி சித்தர், பூவந்தி (G 72) – 20 காளைகளை அடக்கி முதலிடம்

ஶ்ரீதர், பொதும்பு (P 227) – 14 காளைகளை அடக்கி இரண்டாமிடம்

விக்னேஷ், மடப்புரம் (G 66) – 10 காளைகளை அடக்கி மூன்றாமிடம்

அஜய், ஏனாதி (G 80) – 9 காளைகளை அடக்கி 4வது இடம் ( காயம் காரணமாக விலகல்)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.