ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக தைரியமாக குரல் கொடுத்த சிறுமி – இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக தைரியமாக குரல் கொடுத்த சிறுமி குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்கள் உயர்கல்வி…

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக தைரியமாக குரல் கொடுத்த சிறுமி குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இந்நிகழ்வு உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஆப்கானை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் தனது தந்தையிடம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என கூறி, கல்வி குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு ஆப்கானிஸ்தான் தந்தை தனது மகளிடம் வேடிக்கையாக பள்ளி ஆண்களுக்கு மட்டுமே என்று கூறுகிறார். அதற்கு அந்த சிறுமி பெண்களுக்கு கல்வி எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுட்டிக்காட்டி தைரியமாக பேசுவதோடு, என்னை ஏன் பள்ளிக்கு விடமாட்டேன் என கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு மீண்டும் அந்த தந்தை ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி என்பதால் உனது சகோதரனை மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என மீண்டும் வலியுறுத்த, உடனே அந்த சிறுமி பள்ளிக்கல்வி பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான், சண்டை மற்றும் அழிவு ஆகிய இரண்டும் தான் ஆண்களுக்கு எனக் கூறுகிறார்.

அதிலும் ஆண்கள் தான் சண்டை மூலம் அழிவை ஏற்படுத்துகிறார்கள், பெண்கள் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை என கூறிய அந்த சிறுமி, பெண்கள் பள்ளிக்கு செல்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார். பிறகு நான் நன்றாக பள்ளி படிப்பை முடித்து எதிர்காலத்தில் ஆசிரியராகவோ டாக்டராகவோ இஞ்சினியராகவோ ஆக வேண்டும், இதுதான் எனது ஆசை என தைரியமாக பேசும் அந்த சிறுமியின் பேச்சை கேட்ட தந்தை உடனே தனது மகளின் கல்விக்கு முழு ஆதரவை தான் தருவதாகவும், அவளை பள்ளியில் சேர்ப்பதாகவும் உறுதி அளிக்கிறார். இந்த காணொளியை பார்த்த பலரும் அந்த சிறுமியின் தைரியத்தை தற்போது பாராட்டி வருவதோடு தொடர்ந்து லைக் செய்து பகிர்ந்தும் வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.