கடந்த ஒரு வாரக் காலமாக சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல் தற்போது மீட்கப்பட்டு மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
உலகின் பிஸியான நீர்வழி போக்குவரத்து தடங்களில் ஒன்றால் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய் அன்று பனாமா நாட்டினுடைய மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர் கிவன் கப்பல் தரை தட்டி நின்றது. இதனால் சுமார் 400 கப்பல்கள் அந்த கால்வாயின் வழியே பயணிக்க முடியாமல் சிக்கித் தவித்தது. இதனை தொடர்ந்து ஒரு வாரக் காலமாக கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இந்த சரக்கு கப்பலை சூயஸ் கால்வாய் நிர்வாகம் வெற்றிகரமாக மீட்டுள்ளது.

300 மீட்டர் அகலம் கொண்ட இந்த கால்வாயானது மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கிறது. இந்த கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்த 400 மீட்டர் நீளம் கொண்ட எவர் கிவன், அதிவேக காற்று காரணமாக பாதையிலிருந்து விலகி தரைதட்டி நின்றது.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் சுமார் 30,000 கன மீட்டர் மணல் அப்புறப்படுத்தப்பட்டு, 11 இழுவை விசைப்படகுகள் மற்றும் 2 சக்திவாய்ந்த இழுவை படகுகள் மூலம் 2,24,000 டன் எடை கொண்ட எவர் கிவன் மீட்கப்பட்டது. இந்த பணியை சூயஸ் கால்வாய் நிர்வாகமும், டச்சு நாட்டின் ஸ்மித் இன்டர்நேஷ்னல் நிறுவனமும் இனைந்து வெற்றிகரமாக முடித்துள்ளது.
சர்வதேச அளவில் இந்த கால்வாய் வழியாக 15 சதவிகிதமான கப்பல் போக்குவரத்துகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழித்தடம் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இனைக்கின்றது. இதன் மூலம் எகிப்து கணிசமான அந்நிய செலாவணி வருவாயை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







