நாமக்கட்டி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழ்நாட்டை சேர்ந்த 58 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டதையடுத்து, மேலும் 3 பொருட்களுக்கு குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும்…

தமிழ்நாட்டை சேர்ந்த 58 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டதையடுத்து, மேலும் 3 பொருட்களுக்கு குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும்தான் புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கமாகும். ஓரிடத்தில் விளையக்கூடிய பொருள்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம், அந்த இடத்தின் காலநிலை, புவியியல் பகுதி, தனித்துவத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புவிசாா் குறியீடு வழங்கப்படுகிறது.

புவிசார் குறியீட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ‘பொருள்கள் புவிசாா் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999’ என்ற சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்தக் குறியீடு அளிக்கப்பட்ட பொருள்களை வேறு யாரும் அதே பெயரில் விற்பனை செய்ய முடியாது. இந்தக் குறியீடு 10 ஆண்டுகளுக்கு செல்லும். அதன் பிறகு புவிசார் குறியீடை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மேலும் மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அவை, திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, தஞ்சை, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று இதுவரை 17 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.