பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இந்த ஆண்டு தகுதியான ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள், அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்தது. அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு 6 ஆயிரத்து 442 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றுக்கும் கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்த 2 நாட்களும், கல்லூரிகளை தேர்வு செய்ய 2 நாட்களும், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவை உறுதி செய்ய 2 நாட்களும், இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய ஒரு நாளும் மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. தரவரிசையில் 14 ஆயிரத்து 789 முதல் 45 ஆயிரத்து 227 வரை உள்ளவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.








