28.3 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர்; யஸ்வந்த் சின்ஹாவின் கதை!

தென்னிந்தியாவைவிட வடஇந்தியாவில் தான், தீபாவளி பண்டிகை களைகட்டும். தொடர்ந்து, பத்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழாவில் பட்டாசு வெடித்தும், ஒருவருக்குகொருவர் பரிசுகளை வழங்கியும் அன்பை பரிமாறிக் கொள்வர், கொண்டாடி மகிழ்வர். அந்தளவுக்கு, ஒவ்வொரு குடும்பத்தின் அளவற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தும் தீபாவளி பண்டிகையை போன்றது, யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இணைந்தது” என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அகம் மகிழ்ந்து வர்ணித்தார் அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த எல்.கே. அத்வானி.

பேராசிரியர், ஐஏஎஸ் அதிகாரி, சிறந்த நிர்வாக ஆளுமை, பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் திறமைக்கொண்ட யஷ்வந்த் சின்ஹா 1992ம் ஆண்டு பாஜகவில் இணைந்தபோது அவரின் வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர் பாஜகவினர். சின்ஹாவின் அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்ள கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதியமைச்சர் வாய்ப்பும் அளிக்கப்பட்டு, 1998 முதல் 2002ம் ஆண்டுவரை திறம்பட செயல்பட்டார் யஷ்வந்த சின்ஹா.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோது திறந்தவெளி பொருளாதார முறையில் இந்திய பொருளாதாரத்தை உறுதியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பல பெரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக பரவலாக பாராட்டப்பெற்றார். இதேபோன்று, பெருநிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டி விகிதம் குறைத்தல், அடமான வட்டிக்கு வரி விலக்கு அறிமுகப்படுத்தியது, தொலைத்தொடர்பு துறையில் தனியார் முதலீட்டை அனுமதித்தது மற்றும் பெட்ரோலிய துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது என, சின்ஹா நிதியமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொண்ட நிதி சீர்திருத்தங்கள் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு பெருமைச் சேர்த்தது.

எனினும், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்க்கு சின்ஹாவின் பொருளாதார கொள்கை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் மாற்றுக்கருத்து இருந்தது. அதற்கு காரணம், பிற பாஜக மூத்த உறுப்பினர்களைப் போல் யஷ்வந்த் சின்ஹா நேரடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர் கிடையாது என்பதுதான். பாஜகவில் உட்கட்சி ரீதியாக யஷ்வந்த் சின்ஹாவின் நடவடிக்கையில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் சுதந்திரமாக செயல்பட அரணாக காத்து நின்றார் அடல் பிகாரி வாஜ்பாய். ஆனால், இந்த காட்சிகள் அனைத்தும் 26 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு அப்படியே தலைகீழாக மாறியது.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் மோடி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது, மத்திய அரசின் நடவடிக்கைகளை வெளிப்படையாகவே விமர்சித்தார் பாஜகவில் இருந்த யஷ்வந்த சின்ஹா. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிகழ்ந்த பொருளாதார சரிவு, சரக்கும் மற்றும் சேவைக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார். பாஜகவில் இருந்து கொண்டே மோடி அரசின் நடவடிக்கையை விமர்சித்தது அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சின்ஹாவின் விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “80 வயதில் யஷ்வந்த் சின்ஹா வேறு கட்சியில் இணைவதற்கான வேலையை தேடுகிறார்” என சாடினார். மத்திய அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வியோ.“எப்போதும் பொருளாதாரத்தை சரியாக கணிக்கும் யஷ்வந்த் சின்ஹா, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தவறாக கணித்துவிட்டார்” என அவரது பொருளாதார அறிவை கேள்விக்குள்ளாக்கினார்.

இப்படி, பாஜகவினராலேயே கடுமையாக எதிர்க்கப்பட்ட அக்கட்சியின் தேசிய முகங்களில் ஒன்றாக இருந்த யஷ்வந்த் சின்ஹா, 1990களில் எல்.கே அத்வானி தலைமையிலான ராம ஜென்மபூமி பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்தபோதுதான், அத்வானியின் அரசியல் பேச்சால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்தார். ஆனால் பாஜகவின் தலைமையில் ஏற்பட்ட மாற்றங்கள், பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கட்சியில் அதிகரித்த தனிநபர் துதி பாடல் போன்றவை காரணமாக யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. 2018ம் ஆண்டு பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சின்ஹா விலகிய போது, அவர் துணைத் தலைவர் அந்தஸ்தில் இருந்தார். கட்சியில் இருந்து விலகிய போது, “கட்சி அரசியலில் இருந்து சன்யாசம் பெறுவதாகவே” சின்ஹா கூறினார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த சின்ஹா பாஜகவில் இருந்து விலகினாரோ, அதே சின்ஹாதான், தற்போது, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி, சமாஜ்வாதி உள்ளிட்ட 17 கட்சிகளின் ஆதரவை பெற்ற குடியரசு தலைவர் பதவிக்கான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் வெளியிட்ட இந்த அறிவிப்பு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகவே மாறியுள்ளது.

அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் ஆழ்ந்த அனுபவம் கொண்ட யஷ்வந்த் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னாவில் 1937ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி பிறந்தவர். வட இந்தியாவில் சித்திரகுப்த வம்ச காயஸ்தர் என்றழைக்கப்படும் இந்து குடும்பத்தில் பிறந்த யஷ்வந்த் சின்ஹா, பாட்னா பல்கலைக்கழகத்தில் 1958ல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் படித்த பாட்னா பல்கலைக்கழகத்திலேயே சில ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றினார். இதற்கிடையே 1960ல் இந்திய குடிமை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மாநிலத்தில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக 4 ஆண்டுகள் பணியாற்றிய சின்ஹா, மாநிலத்தின் வருவாய்துறை துணை செயலாளராகவும், செயலாளராகவும் 2 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

மத்திய வணிகவரி துறையில் துணை செயலாளராக இருந்த சின்ஹா, ஜெர்மனியின் பான் நகரில் திறக்கப்பட்ட இந்திய தூதரகத்தில் வருவாய்துறையின் முதல் முதன்மைச் செயலாளராக 1971 முதல் 1973ம் ஆண்டு வரை பணியாற்றினார். இதேபோன்று, ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைவராக 1973 முதல் 1974 வரை பணியாற்றியவர், ஐரோப்பிய பொருளாதார சமூகத்துடனான இந்தியாவின் உறவை பேணுவதில் முக்கிய பங்காற்றினார். இவ்வாறு சர்வதேச அளவில் வணிகவியல் துறையில் அனுபவம் பெற்ற யஷ்வந்த் சின்ஹா, பீகார் மாநில அரசின் தொழில்துறை உள்கட்டமைப்பிலும், மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டு தொழில்துறை ஒத்துழைப்பு, தொழில்நுட்ப இறக்குமதிகள், அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் தொழில்துறை ஒப்புதல்கள் ஆகியவற்றை திறம்பட நிர்வகித்தார்.

1980 முதல் 1984 வரை, மத்திய போக்குவரத்து அமைச்சகத்தில் இணை செயலாளராக இருந்த யஷ்வந்த் சின்ஹா சாலை போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். ஐஏஎஸ் அதிகாரியாக 24 ஆண்டுகள், நாட்டின் பல்வேறு அரசு துறைகளில் அனுபவம் வாய்ந்த ஆளுமையாக திகழ்ந்த யஷ்வந்த் சின்ஹா, இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலைக்கு பின்னர் அரசியல் பக்கம் திரும்பினார். அப்போது, இந்திராவுக்கு எதிராக தேசியளவில் கவனம்பெற்ற கட்சியாக ஜனதா கட்சி உருவெடுத்திருந்தது. குறிப்பாக, சோஷலிஸ்ட் ஜனதா கட்சியை தொடங்கிய ஜெயபிரகாஷ் நாராயணனின் பேச்சால் அரசியல் பக்கம் ஈர்க்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா, 1984ம் ஆண்டு தான் வகித்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா, 1988ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989ல் வி.பி.சிங் தலைமையில் பல கட்சிகள் இணைந்து “ஜனதா தளம்” உருவானபோது அதன் பொதுச் செயராளராக பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் 1990 முதல் 1991ம் ஆண்டுவரை ஓராண்டு காலத்திற்கு முதல் முறையாக மத்திய நிதியமைச்சராக பணியாற்றினார். யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக பணியாற்றிய போது நாடு கடும் பொருளாதார சரிவில் சிக்கிகொண்டிருந்தது. எந்தளவுக்கு என்றால், நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருந்தது. அப்போது, யஷ்வந்த் சின்ஹா மேற்கொண்ட நடவடிக்கைகள் தான், நாட்டை திவாலாகும் நிலையில் இருந்து காப்பாற்றியது என்று கூறலாம். அன்று சின்ஹா வகுத்துக்கொடுத்த பொருளாதார பாதையைத்தான், அவருக்கு பின்னர் வந்த மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங், பிரனாப் முகர்ஜி, ப.சிதம்பரம், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் என பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால், நிதியமைச்சராக முதல் நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்த போது எழுந்த விமர்சனங்கள், அவர் அரசியல் களத்தில் துடிப்பாக செயல்பட்ட வரைக்கும் நீடித்தது என்றே கூறவேண்டும்.

90களில் நாட்டின் பொருளாதாரத்தில் அப்படி என்னதான் நிகழ்ந்தது என்று கேட்டால், நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்து சீர்திருத்தப்படாத பொருளாதாரத்தின் நீட்சியால் நாடு கடும் பாதிப்பை சந்தித்திருந்தது என்று கூறலாம். இதனைத் தொடர்ந்தே, 1988ல் ஐஎம்எப் என்றழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம், இந்தியா பொருளாதார நெருக்கடியை நோக்கி வேகமாக நகர்கிறது என்றும், அதிலிருந்து மீள கடன் பெற்றுக்கொள்ளுமாறும் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தியது. ராஜீவ்காந்தி இந்த ஆலோசனைக்கு உடன்பட்டாலும், அப்போது நெருங்கிய பொதுத் தேர்தல் காரணமாக அவரால் பொருளாதார நடவடிக்கையில் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்தலுக்கு பிறகு வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைந்தது போது, அரசு கருவூலம் காலியாக இருப்பதாக அறிவித்தார் வி.பி.சிங். ஆனால், அவர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு சட்டம் கடும் எதிர்ப்பை சந்தித்ததால், அடுத்த ஒன்றரை ஆண்டிலேயே வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. இதற்குள் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்திருந்தது. இந்த சூழலில் தான், பிரதமராக பதவியேற்றார் சந்திரசேகர். நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா நியிமிக்கப்பட்டார். அவருக்கு அப்போது பொருளாதார ஆலோசகராக இருந்தவர்தான் மன்மோகன் சிங்.

அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிறைந்த சூழலில், நிதியமைச்சராக பொறுப்பேற்றிருந்த யஷ்வந்த் சின்ஹா ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். நாடு பெற்றிருந்த கடன்களுக்கான வட்டித்தொகையை திருப்பி செலுத்துவதற்கு கூட போதுமான நிதி இல்லாதிருந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க, அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. அதாவது, கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை, சுவிட்சர்லாந்தில் இருந்த வங்கி ஒன்றில் அடமானம் வைத்ததன் மூலம் பெறப்பட்ட சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாயை கொண்டு தற்காலிகமாக நாட்டின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கைதான் அது. ஆனால், மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கசிந்து, பிரதமர் சந்திரசேகரையும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவையும் கடுமையாக சாடினர். இதனால், நெருக்கடியும் சவாலும் சந்திரசேகர் அரசுக்கு மேலும் மேலும் அதிகரித்தன.

இதற்கிடையில், அமெரிக்கா – வளைகுடா நாடுகள் இடையே போர் மூண்டதால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தது. அப்போது, சட்டம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த சுப்ரமணியன் சுவாமி, சர்வதேச நாணய நிதியம் இந்தியாவுக்கு கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அதற்கு கைமாறாக, அமெரிக்க போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப இந்திய விமான நிலையங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்தது. வேறு வழி இல்லாத காரணத்தால் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை என்றாலும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாட்டை விற்றுவிட்டதாக இடதுசாரி கட்சிகள் விமர்சித்தன. இப்படிப்பட்ட பொருளாதார சூழலுக்கு மத்தியில் தான், 1991 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அரசின் பிரதமராக பொறுப்பேற்றார் பி.வி.நரசிம்மராவ். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நரசிம்மராவ் என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது..

1991ல் பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அரசு வீழ்ச்சியடையவில்லை என்றால், நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஹீரோக்களாக சந்திரசேகரும், யஷ்வந்த் சின்ஹாவும் அறியப்பட்டிருப்பார்கள் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கூற்றாக இருக்கிறது. இதற்கு காரணம், யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவுத் திட்ட அறிக்கையும், பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த பொருளாதார சீர்திருத்த நடடிவக்கைகளும், ஒன்று போலவே இருந்ததுதான். உண்மையில் மன்மோகன் பேசப்பட்ட அளவுக்கு யஷ்வந்த் சின்ஹா பேசப்படவேயில்லை. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள்தான், தற்போதும் தேசத்தின் பொருளாதார கட்டுமானத்திற்கு அடித்தளமாக இருக்கிறது.

1991ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் நிகழ்ந்த அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள், யஷ்வந்த் சின்ஹாவின் அரசியல் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. சின்ஹாவுக்கு மத்திய நிதியமைச்சர் வாய்ப்பளித்த சந்திரசேகரின் மறைவுக்கு பிறகு, 1992ல் அத்வானியின் ரதயாத்திரை பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் யஷ்வந்த் சின்ஹா. அப்போதுதான் சின்ஹாவின் வருகையை பாஜகவுக்கு கிடைத்த தீபாவளி பரிசு என புகழ்ந்தார் அத்வானி. 1995ம் ஆண்டு ராஞ்சி தொகுதியில் இருந்து பீகார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சின்ஹா, 1996ல் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே பீகார் மாநில பாஜக தலைவராகவும் உருவெடுத்தார். மேலும், 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் தொகுதியில் வெற்றிப்பெற்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இடம்பிடித்தார். தொடர்ந்து 2002 முதல் 2004 வரை வெளிவிவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

நிதித்துறையில் யஷ்வந்த் சின்ஹா கொண்டுவந்த அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகள், பாராட்டை பெற்றதோ இல்லையோ, கடும் விமர்சனத்தை சந்தித்தன. 2004 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தொடர்ந்து, 2009-லும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான சின்ஹாவுக்கு வாஜ்பாய் காலத்தில் இருந்தது போன்ற முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. 2012ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பி.ஏ. சங்மாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு பதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்ததால், யஷ்வந்த் சின்ஹா மீது கட்சியில் கடும் அதிருப்தி உருவானது. இதன் வெளிப்பாடாகவே, கட்சியின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்ற தலைவர்கள், 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் “மூளை இறந்தவர்கள்” என்று விமர்சித்தனர். மேலும், 2014ல் மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட போதும், கட்சியின் மூத்த உறுப்பினரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு எம்.பி பதவி அளிக்கப்படவும் இல்லை. மாறாக அவரது மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் பாஜக அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார் சின்ஹா.

குறிப்பாக, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்டவை குறித்தெல்லாம் கடுமையாக விமர்சித்தார் சின்ஹா. பதவி கிடைக்காததாலேயே இவ்வாறு விமர்சிப்பதாக பதிலடி கூறினர் பாஜகவினர். இதற்கு மேலும் பாஜகவில் இருக்க கூடாதென, 2018ம் ஆண்டு பாஜகவுடனான 27 ஆண்டுகால உறறை முறித்துக்கொண்டார் யஷ்வந்த் சின்ஹா. வேறு கட்சியில் சேரப்போவதில்லை என்று கூறினாலும், 2021ல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். அப்போது அவர் கூறியது ஒன்றுதான், வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஒருமித்த கருத்தை நம்பியதாகவும், தற்போதைய தலைமை மக்களை நசுக்குவதை நம்புகிறது என்றும் பதிவு செய்தார்.

இந்த சூழலில் தான், நாட்டின் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து 22 கட்சிகளுக்கு கடிதம் எழுதினார் மம்தா. சரத் பவார், பரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும் மூவருமே குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்ததால், 17 கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவது உறுதியான நிலையில், அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பிராமனர்களுக்கு ஆதரவான கட்சி பாஜக என்கிற பிம்பத்தை உடைக்கவே, முர்மு களமிறக்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், எல்.முருகன் போன்றவர்கள் உயர் பதவியில் நியமிக்கப்பட்டதன் பின்னணியிலும் இதே காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் தேர்தல் பிரசார உத்தி குறித்து, டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யஷ்வந்த் சின்ஹா, “குடியரசு தலைவர் தேர்தல் என்பது தனி நபர் போர் கிடையாது. நாடு சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டம்” என்றார். “இந்த போராட்டத்தில் போரிட என்னைத் தேர்வு செய்த அரசியல் கட்சிகளுக்கு நன்றி” என்றார். “நான் திரௌபதி முர்முவை எதிர்த்து போட்டியிடவில்லை; இது சித்தாந்தத்துக்கு எதிரான போட்டி. குடியரசு தலைவர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க கூடாது” என ஆணித்தரமாக தன் கருத்தை தெரிவித்திருக்கிறார் யஷ்வந்த் சின்ஹா. அவரின் வாதத்தில் அவர் உறுதியாக இருப்பாரா என்பதெல்லாம் ஜூலை 21ம் தேதிக்கு பிறகே தெரியவரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading