முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்றுக் கொண்டார்.
முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் விபத்தில் மரணமடைந்ததால், அவருக்கு அடுத்ததாக இருந்த எம்.எம்.நரவனே தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் லெப்டினென்ட் ஜெனரல் அல்லது ஜெனரல் பதவியில் உள்ளவர்கள் 62 வயதை பூர்த்தியடையாதவராக இருந்தால், அவரை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கலாம் என மத்திய அரசு விதியில் திருத்தம் செய்தது.
அதனடிப்படையில், ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அனில் சவுகானுக்கு முப்படைகளின் தலைமை தளபதி பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது தந்தை சுரேந்திர சிங் சவுகானுடன் டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுக்கு ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதரி மற்றும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் சவுகான், இந்திய பாதுகாப்புப் படையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.
-ம.பவித்ரா








