ரசிகனை போல ஓடிச் சென்று சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் சட்டையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 61-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோற்கடித்தது. இத்துடன் கொல்கத்தா தனது 6-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.
நேற்றுடன் இந்த சீசனில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே பங்கேற்கும் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. மேலும் இந்த சீசனோடு தோனி ஓய்வுபெறுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், சென்னையில் சிஎஸ்கே விளையாடிய கடைசி லீக் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அந்த வகையில் தங்களுக்கு இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நேற்றைய போட்டியின் முடிவில் நன்றி தெரிவித்த கேப்டன் எம்.எஸ்.தோனி தனது கையொப்பமிட்ட பந்துகள், தொப்பிகள் போன்றவற்றை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்தார்.
அப்போது, ஒருபுறம் பேட்டி அளித்துக் கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தன் அருகில் வருவதைக் கண்டதும் திடீரென கேமராவை விட்டு விலகி, அவரிடம் நேராக ஓடினார். அங்கு தோனியிடம் பேனாவை கொடுத்து தன் சட்டையில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டுக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத தோனி அவர் கேட்டபடி சட்டையில் கையெழுத்திட்டு, அவரை கட்டிப்பிடித்து தனது அன்பையும் வெளிப்படுத்தினார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தோனியிடம் கையெழுத்து வாங்கிய காட்சி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.







