கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

தேனி மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை  2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து  மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

தேனி மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை  2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து  மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா
வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு,  ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து கஞ்சா வழக்குக்காக மே. 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்,  மறுநாள் (மே.8) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இந்த வழக்கில் சவுக்கு சங்கரை நீதிபதி செங்கமலச்செல்வன் மே 22 வரை காவலில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன்
வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  மேலும் கஞ்சா வழக்கில்  சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி,  தேனி பழனி செட்டிபட்டி காவல்துறையினர் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.  இந்த மனுமீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.

7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என  பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.  அதற்கு, காவலில் வைத்து விசாரிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சபனையும் இல்லை.  எனது வழக்கறிஞர்கள் என்னை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் வாதிட்டார்.

இதனையடுத்து இரண்டு நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி செங்கமலச் செல்வன் அனுமதி அளித்தார்.  மேலும் வழக்கறிஞர்கள் சந்திப்பிற்கும் அனுமதி அளித்தார்.  காலை,  மாலை,  இரவு என மூன்று வேளைகள் சவுக்கு சங்கரை சந்திக்க அவரது வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து வரும் மே.22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தவும் நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.