அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பறித்து சென்ற கும்பல் – அம்மா பேரவை செயலாளர் மீது புகார்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடத்தி சென்ற மர்ம நபர்கள் ஒன்றை கோடி ரூபாயை பெற்று அவரை விட்டு சென்றுள்ளனர்.   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற…

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடத்தி சென்ற மர்ம நபர்கள் ஒன்றை கோடி ரூபாயை பெற்று அவரை விட்டு சென்றுள்ளனர்.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த எஸ். ஈஸ்வரன். 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் ஈஸ்வரனை கடத்திச் சென்று, விடிய விடிய வைத்து தடியால் தாக்கியுள்ளனர். மேலும் 3 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன், வீட்டில் உள்ள ஒன்றரை கோடி ரூபாயை எடுத்து தருவதாகவும் தன்னை விடுவிக்குமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து, நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஈஸ்வரனை வீட்டுக்கு அழைத்து வந்த மர்ம கும்பல் வீட்டிலிருந்த ஒன்றரை கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு அவரை விட்டு சென்று விட்டனர். அதன் பிறகு பவானிசாகர் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். புகாரில், தான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தன்னை வழிமறித்து கண்களை கருப்பு துணியால் கட்டி தன்னை கடத்தி சென்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு தன்னை விட்டு சென்றதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவரில் ஒருவர் மட்டுமே தனக்கு அடையாளம் தெரிந்தது. அவர் அறியப்பம்பாளையம் பகுதி அம்மா பேரவை செயலாளராக இருந்த சரவணன் என்றும் ஈஸ்வரன் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். சரவணன் மீது பல்வேறு மோசடி வழக்குகள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த வருடம் அ.தி.மு.க-வில் இருந்து
நீக்கப்பட்டுள்ளார்.

 

அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.