பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: ககன்தீப் சிங் பேடி

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், சென்னையில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு…

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், சென்னையில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. மழை காலம் என்றால் சென்னையைப்போன்ற நகரங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவது முதல் ஏல்லா இடர்பாடுகளும் ஏற்படுவது வழக்கம். போதிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால் 2015-ம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது.

இதுபோன்ற பேரிடர்கள் நடைபெறாமல் தடுக்க தமிழ்நாடு அரசு மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்கம்பங்கள் சீரமைப்பது, வடிகால்களை சீர் செய்வது போன்ற நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் தீவுத்திடலில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் வீடற்றவர்களை கண்டறிந்து, அவர்களை வீடற்றவர்களுக்கான காப்பகங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்றைய 5ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில், 1 புள்ளி 25 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இதுவரை 84 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 45 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மழை காலங்களில் மழை நீர் வடிகால்கள் இல்லாத பகுதிகள் மற்றும் குடிசை பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் ராட்சச இயந்திரங்கள் கொண்டு மழைநீர் மற்றும் கழிவு நீரினை அப்புறப்படுத்துவதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் 88 CCTV கேமரா மூலம் மழை நீர் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.