ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக மத்திய அரசு இன்று கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றம் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்காக, நாடு முழுவதும் 200க்கும் அதிகமான முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக இதில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை இறுதி செய்வதற்கான ஜி20 நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கியது.
இதனிடையே, ஜி20 மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு டெல்லியில் இன்று கூட்டியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 40 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுசெயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா சார்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கான சூழலை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.







