ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கோட்டையில் நடிகை ஹன்சிகாவிற்கும், அவரது நண்பர் சோஹைல் கத்தூரியாவிற்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. அண்மையில், தமது நண்பர் சோஹேல் கத்தூரியாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஹன்சிகாவிற்கு, கடந்த டிசம்பர் 2ம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடைபெற்றன. முதல் நாளில் மெகஹந்தி நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் சங்கீத் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மஞ்சள் வைக்கும் சடங்கை தொடர்ந்து நேற்று இரவு திருமணம் நடைபெற்றது.
சிந்தி முறைப்படி நடைபெற்ற ஹன்சிகா திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணத்தில் ஹன்சிகா சிவப்பு கலர் லெஹங்காவிலும் ஆபரணங்களாலும் ஜொலித்தார். திருமணம் நடைபெற்றபோது வான வேடிக்கைகளுடன் பட்டாசு வெடிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.







