தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கின் போது 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
கொரோனோ இரண்டாவது அலையில் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்.
மேலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக திருமணங்கள் மற்றும் இறப்பு போன்றவற்றிற்கு செல்லக் கூடியவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற்ற கடிதங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு செல்வோர் மருத்துவருடைய பரிந்துரை கடிதம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே, சென்னை மாநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.







