கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 20-ம் தேதி முதல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளி மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான, பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கும், இரவு நேர ஊரடங்கின்போது அனுமதியில்லை, என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல், இரவு நேரங்களில் ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.







