தூத்துக்குடி மாவட்டம், (அப்போது திருநெல்வேலி) ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925-ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் நல்லக்கண்ணு. தந்தை ராமசாமி மற்றும் தாய் கருப்பையம்மாள் ஆவர். படிக்கும் வயதிலேயே சமூகப்பணிகளில் ஈடுபாட்ட நல்லக்கண்ணு 1943 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார்.‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது செங்கொடியின் கீழே இளைஞர்களை திரட்டி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடினார். இதற்கு பரிசாக அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
முதல் நடவடிக்கை
இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் கடும் உணவு பஞ்சம் நிலவி வந்தது. அப்போது பத்தினிக் கோட்டம் என்ற இடத்தில் நெல் மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதை அறிந்த நல்லக்கண்ணு, அது குறித்து “ஜனசக்தி” என்ற பத்திரிகையில் எழுதினார். மேலும் அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை மீட்டார். இது பஞ்சத்தால் பசியில் வாடிய மக்களின் பசியை தீர்க்க உதவியது. இதனையடுத்து முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்து நல்லக்கண்ணு வீட்டை விட்டு வெளியேறினார்.
7 ஆண்டு சிறை
‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1948 ஆம் ஆண்டில் முன்னெடுத்தது. இதனால் அக்கட்சியை தடை செய்யப்பட்டது. மேலும் நல்லகண்ணுவும் நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு 27 வயது மட்டுமே. சிறையில் காவல்துறையினர் நல்லகண்ணுவை கடுமையாக சித்ரவதை செய்தனர். காவல்துறையினர் அவரை தலைகீழாகத் தொங்கவிட்டு, மீசையை சிகரெட்டால் எரித்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த நல்லக்கண்ணு ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியை ரஞ்சிதம் அம்மாளை நல்லகண்ணு மணந்தார். இந்த தம்பதிக்கு அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ரஞ்சிதம் அம்மாள் 2016 இல் 82 வயதில் சென்னையில் இறந்தார்.
சமூக மற்றும் சுற்று சூழல் பணிகள்
1996ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் இரு சமூகத்தினருக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. அப்போது நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டடார். ஆனாலும் தொடர்ந்து அப்பகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக போராடினார்.
தாமிரபரணி நதியையும், அதைச் சார்ந்த சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வந்த சக்திவாய்ந்த மணல் மாஃபியாக்களுக்கு எதிராக அவர் தனிப்பட்ட முறையில் எதிர்த்துப் போராடினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு நேரில் ஆஜராகி, ஆற்றில் மணல் எடுப்பதற்கு ஒரு முக்கிய தடையைப் பெற்றார்.
தேர்தலில் வெல்லாத நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் சட்சியின் மாநிலச் செயலாளராக , 1992 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் நல்லகண்ணு. 2005 வரை சுமார் 13 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். 1967, 1977 சட்டமன்றத் தேர்தல்களில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டார். அதேபோல 1999 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை.
விமர்சிப்போரும் போற்றுயும் எளிமை
எளிமை மற்றும் தியாகத்தின் ஒரு முன்மாதிரியாக விளங்கிய நல்லககண்ணுவுக்கு சொந்தமாக வீடு இல்லை. 2007 முதல், சென்னையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார் நல்லக்கண்ணு. அக்குடியிருப்பை அதிகாரிகள் இலவசமாக வழங்கியிருந்தாலும், மாதந்தோறும் ₹4,500 வாடகை செலுத்தி வந்தார்; பின்னர், அவர் கே.கே.நகரில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
கட்சியானது அவரது 80வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கிய 1 கோடி ரூபாயை முழுத் தொகையையும் கட்சி நிதிக்கு திருப்பி அளித்தார். தமிழக அரசு அம்பேத்கர் விருதை ₹1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கியபோது, அதை கட்சிக்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கும் சமமாகப் பிரித்து கொடுத்தார். 2022 ஆம் ஆண்டு, சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு மதிப்புமிக்க “தகைசல் தமிழர் விருது” விருதை ₹10 லட்சத்துடன் வழங்கினார்; நல்லக்கண்ணு தனது சொந்த பணம் ₹5,000 சேர்த்து முழுத் தொகையையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
விடைபெற்றார் நல்லக்கண்ணு
நூற்றாண்டை தாண்டிய பிறகும் மக்கள் போரட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இயக்கத்தினர் ’தோழர்’ என்று அழைக்கப்பட்டு வந்த நல்லக்கண்ணு மக்களால் ’அய்யா’ என்று அழைக்கப்பட்டார் நல்லக்கன்ணு. தொடர்ந்து வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நல்லக்கண்ணு இன்று சென்னையில் காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







