பொள்ளாச்சி அருகே ஃபிரிட்ஜ் வெடித்து காவலர் மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாத். இவர் சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் இருந்தாலும் அவ்வப்போது பொள்ளாச்சியில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ விடுப்பு எடுத்த சபரிநாத் வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
இதையும் படிக்க: பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு விட்டு, மறுபகுதியில் இவர் தங்கியிருந்தார். அப்போது, சாந்தி என்ற பெண் இன்று காலை சபரி வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சபரிநாத் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்புத் துறை , காவல் துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால், சபரிநாத், சாந்தி இருவரும் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர்.
இதையடுத்து, இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஃபிரிட்ஜ் பழுதால் விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு ஏற்பட்டதா என்பது உரிய ஆய்வுக்குப் பின்னரே தெரியும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








