நேதாஜிக்கு பாரத ரத்னா இப்போது வழங்கினால் அது மிகத் தாமதமானது என அவரது மகள் அனிதா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைக்காக தேசிய ராணுவப் படையை உருவாக்கி போராடிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள் பராக்கிரம திவாஸ் என்ற பெயரில் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச பாஜக எம்.பி அனில் பிரோஜியா, நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார். ஆனால், நேதாஜுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு அவரது மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருது வழங்க ஆரம்பித்தபோதே முதலில் விருதுபெற்ற நபர்களின் வரிசையில் நேதாஜி பெயர் இருந்திருக்க வேண்டும் என்ற அவர், அவருக்கு பின்பு வந்தவர்களுக்கு எல்லாம் விருது வழங்கப்பட்டுவிட்டது. இப்போது அவருக்கு வழங்குவது மிகத் தாமதமானது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப் பழமையான ஹவுரா-கல்கா இடையே செல்லும் ரயிலுக்கு நேதாஜி பெயரைச் சூட்டியதற்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். 1992ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது நேதாஜிக்கு மறைவுக்கு பிறகான பாரத ரத்னா வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







