பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இலவசங்களால் மக்கள் சோம்பேறியாவதாகவும், தமிழ்நாட்டில் இலவசங்களால் மக்கள் பலம் பொருந்தியவர்களாக உள்ளதாகவும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா சுற்றுலா விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதியிலும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தெரிவிக்க முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இது அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற முதலமைச்சரின் பரந்த மனப்பான்மையை காட்டுகிறது என்றார்.
போலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற அவர், ஒன்றிய அரசின் இலவச திட்டம் குறித்த போக்கு பாராபட்சமாக உள்ளதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை ஊக்குவிப்பதும், பாஜக அல்லாத மாநிலங்களில் எதிர்ப்பதும் பாஜகவின் இரட்டை வேடத்தை எடுத்துக்காட்டுகிறது என குற்றம் சாட்டினார்.
பீகார் மாநிலத்தில் வருமான வரி சோதனை என்பது ஜனநாயக ரீதியிலான ஆரோக்கியமல்ல என்றும், ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சியில் இல்லாத நிலையை ஏற்படுத்த சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை தனது ஏவலாளிகளாக பயன்படுத்தி வருவதாகவும், இது போன்ற அத்துமீறல்கள் நடத்தி ஜனநாயக கேடு ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் கல்விக்காக பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் மாநிலம் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், பிற மாநிலங்களை விட கல்வியில் மேலோங்கி உள்ளது என்றார்.
இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள் நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முயற்சிக்கிறார்கள். அதை ஊக்குவிக்க ஒன்றிய பாஜக அரசு திமுக போன்ற சமூக நீதி கட்சிகளை விமர்சிக்கும் பணியை செய்து வருகிறது. மேலும் அதிமுக பலவீனப்பட்டு உடைந்து உள்ளதற்கு பாஜக உடனான கூடா நட்பு தான் காரணம் என்றார். பாஜக ஆளும் மாநிலங்களில் இலவசத் திட்டங்களால் மக்கள் சோம்பேறிகளாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இலவச திட்டங்களால் மக்கள் சுறுசுறுப்பு ஏற்பட்டு மிகச்சிறந்த பொருளாதாரம் பலம் பொருந்தியவர்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








