ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் பிரிவான மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் காமாட்சி மருத்துவமனை இடையே 15 வயதுக்குட்பட்ட 100 குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ் 100 என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது.
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் மணீஷ் லகோடியா மற்றும் காமாட்சி மருத்துவமனை குழுமத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் பகுதி தலைவர் விஜய ராகவேந்திரா மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 பிரிவு தலைவர் விபுல் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 கடந்த ஆண்டு இதய நோயால் குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ் 100 என்ற திட்டத்தின் அடிப்படையில், இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ளும் சேவையை துவக்கியது. தற்போது வரை 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் குறைந்தபட்சம் 100 அறுவை சிகிச்சைகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ள இந்த அமைப்பு, காமாட்சி மருத்துவமனையுடன் இணைந்து அறுவை சிகிச்சைகளைச் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பிறவி இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் உபகரணங்கள் விலை உயர்ந்தவை என்றும், விழிப்புணர்வு இல்லாமை, நிதி மற்றும் மருத்துவமனை வசதிகள் போன்ற முக்கிய பிரச்னைகள் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் உயிரிழப்பதாக காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
வசதியற்ற குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகளுக்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தரமான சுகாதாரச் சேவையை வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய தலைவர் மணீஷ் லகோடியா, குழந்தைகளின் அனைத்து இதய குறைபாடுகளுக்கும் சிகிச்சை பெற உதவும் வகையில் இந்த திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முடிந்தவரை எவ்வளவு குழந்தைகளுக்கு உதவ முடியுமோ அவ்வளவு முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்துள்ள அவர், உதவி தேவைப்படுபவர்கள் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 -ன் சமூக வலைதள பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.









