மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் இந்திய அளவில் 3,32,730 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் இதுவரை 1,62,63,695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 1,86,920 பேர் மரணமடைந்து உள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24,331 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 348 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பூசியின் தேவை அனைத்து மாநிலத்திலும் அதிகரித்து வருகிறது.
மேலும் மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சமந்தமாக சீரம் இன்ஸ்டிட்யூட் விலைப்பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விலைப்பட்டியலில் மாநில அரசுகளுக்கு ஒரு விலையையும் மத்திய அரசுக்கு ஒரு விலையையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2 தடுப்பூசிகளின் கொள்முதல் விலையில் ரூ. 150 ஆகத் தொடர்கிறது என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசியை மற்ற நிறுவனங்களிடம் பெற்று மாநில அரசுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது.







