மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் தினசரி 49 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாகவும், அதற்காக பட்ஜெட்டில் ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்ததாவது:
”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றது. பதவியேற்றதும் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாகவும் ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
அதில் ஒன்றுதான் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் என்பதாகும். மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.
மறுநாளே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம்
மகளிருக்கு சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத் திட்டம் மே 7-ம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினமே அரசாணை வெளியிடப்பட்டு மறுநாளே (மே 8) நடைமுறைக்கு வந்தது. இரவோடு இரவாக பேருந்துகளில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மிகவேகமாக பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் திட்டம்.
மகளிரின் ஏகோபித்த ஆதரவு, பலதரப்பட்ட விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் இதுவரை பேருந்தில் மகளிர் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 311.61 கோடி. இதற்கான கட்டணத் தொகை ரூ.4,985.76 கோடி. திருநர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண வசதி விரிவுபடுத்தப்பட்டதில் இதுவரை 18.04 லட்சம் திருநர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கான கட்டணத் தொகை ரூ. 288.64 இலட்சமாகும். ஏழை, எளிய பெண்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக அமைந்தது. வேலைக்குச் செல்லும் மகளிரால் கொண்டாடப்படும் திட்டமாக இது அமைந்துள்ளது.
75% பேருந்துகள் இயக்கம்
மாநிலத்தில் மொத்தம் இயக்கப்படும் 9,620 நகரப் பேருந்துகளில் 74.46% பேருந்துகள் மகளிருக்காக கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. 2023-24ம் நிதி ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 49.06 லட்சம் மகளிர் பேருந்தில் பயணிக்கின்றனர். மொத்தம் பயணிக்கும் பயணிகளில் மகளிர் பங்கு 66.03% ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் சுமார் 3,013 பேர் நகர பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் எம்.விஜயபாஸ்கர், கொள்கை ஆலோசகர்களுடன் இணைந்து, அரசுக்குச் சொந்தமான பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பயணத்தால் அடையும் பயன்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். வெவ்வேறு தொழில் பிரிவுகளை சார்ந்த பெண் பயணிகளிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம், ஒரு மாதத்திற்கு ரூ.756/- முதல் ரூ.1,012/- வரை அவர்கள் சேமிப்பது தெரியவந்துள்ளது. சராசரியாக மகளிர் சேமிக்கும் தொகை மாதம் ரூ. 888/- என கணக்கிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களை ஆய்வுக் குழுவினர் தேர்வு செய்து ஆய்வு நடத்தி தரவுகளைச் சேகரித்தனர். விவசாயப் பகுதியில் உள்ள பெண்களின் பயணம் பற்றி தெரிந்துகொள்ள நாகப்பட்டினமும், தொழில் நகரங்களில் பெண்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க திருப்பூரும் தேர்வு செய்யப்பட்டது. வர்த்தக மையமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் மதுரையில் வசிக்கும் பெண்களின் பயணம் பற்றி தெரிந்து கொள்ள மதுரை தேர்வு செய்யப்பட்டதாகத் திட்டக் குழு தெரிவித்தது.
பெண்களின் கட்டணமில்லா பயணத்தையும் ஒழுங்குபடுத்தி, அதன் தரவுகளை வைத்திருக்க விரும்பிய தமிழ்நாடு அரசு, தனியாக மகளிருக்கு இலவச பயணம் என்று குறிப்பிட்டு டிக்கெட்டுகளையும் அச்சடித்து வழங்கி வருகிறது..
மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்காக அரசு 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ. 2,800 கோடியை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளது. திருநர்களின் பயணத்திற்கு அரசு ரூ. 1.21 கோடியை ஒதுக்கியுள்ளது.
பயனாளிகள் யார்?
கல்லூரி மாணவிகள், படிக்க நினைக்கும் மகளிர், சமூக அறிவைப் பெற நினைக்கும் பெண்களுக்கு, வீட்டில் இருந்தபடியே சிறு குறு தொழில் செய்யும் இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாகும். ஆயிரம், இரண்டாயிரம் சம்பளத்துக்கு அரை மணி நேரம் பயணம் செய்து வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு பயனுள்ள திட்டமாகும். துணிக்கடைகளில், சிறு நிறுவனங்களில், தூய்மைப் பணியாளர்களாக, கட்டட வேலையில் சித்தாளாகப் பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் பெண்களும் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
குழந்தைகளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் தாய்மார்களுக்கும், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்களுக்கும், வீட்டில் கணவரின் வருமானம் போதாத சூழலில் வேலைக்குச் செல்ல தயாராகும் பெண்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சி, ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியையும் கொண்டே கணக்கிடப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் வரிசையில் இது முக்கியமான முன்னோடித் திட்டமாகும்.
நகர்ப்புற பயனர்களை விட கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்தால் அதிகப் பயனடைகிறார்கள் என்பதும் திட்டக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின் பயனர்களில், 39% பேர் பட்டியல் இனப் பெண்கள், 21% பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள், 18% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் எனவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பெண் பயணிகளில் கிட்டத்தட்ட 50% பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பெண்கள், தங்கள் பயணத் தேவைகளுக்காக குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருப்பது குறைந்திருப்பதாகவும், கவுரவமாக நடத்தப்படுவது, அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு இந்த திட்டம் பங்களிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகை, கூடுதல் வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுவதாக பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, இக்குழுவினர் சென்னை மாநகரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், இத்திட்டத்தின் கீழ் பெண் பயணிகள் மாதத்திற்கு சுமார் 50 பயணங்களை மேற்கொள்வதாகவும், இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.858 வரை அவர்கள் சேமிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்காக, கோயம்பேடு – திருவொற்றியூர், தாம்பரம் – செங்கல்பட்டு மற்றும் பிராட்வே – கண்ணகிநகர் ஆகிய மூன்று வழித்தடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
மகளிர் நலன், மகளிர் மேம்பாட்டுக்கென திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களில் மகளிருக்கு சுய அதிகாரமளிக்க வகை செய்வதாக கட்டணமில்லா பேருந்து சேவை அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










