பிரபல நடிகர்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த சகோதரர்களை சைபர் கிரைம் போலீசார் ஈரோட்டில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரித்து, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்து வெளிவந்த கனா படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தர்ஷன். இவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். கனா தர்ஷனின் புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி உள்ளனர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான அலாவுதீன் மற்றும் 25 வயதான வாகித் என்ற சகோதரர்கள். இவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து உருவாக்கிய இந்த சமூக வலைதள பக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்புக்காக அழைப்பு அனுப்பி உள்ளனர்.
அந்த பெண் இந்த மோசடி சகோதரர்களின் அழைப்பை ஏற்றவுடன், அப்பெண்ணிடம் அன்பாக பேசி பழகி அவரது வாட்ஸ்- அப் எண்ணை பெற்று வாட்ஸ் அப் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும் அந்த மோசடி சகோதர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக வீடியோ கால் பேசி உள்ளார். அப்பெண் பேசிய வீடியோ காலில் இருந்து அவரது புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்ட மோசடி சகோதரர்கள் இருவரும் அப்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.
முதலில் பணம் தர மறுத்த அப்பெண் பிறகு மோசடி சகோதரர்களின் மிரட்டலுக்கு பயந்து அதிர்ச்சி அடைந்து ரூ.2 லட்சத்திற்கும் மேலாக பணத்தை ஜிபே மூலமாக அனுப்பி உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து இருவரும் அப்பெண்ணை மிகவும் டார்ச்சர் செய்யவே, ஒரு கட்டத்தில் அப்பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிடவே, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பாலகுமார் மேற்பார்வையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன், வாகித் ஆகிய 2 பேரும் கூட்டாக இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, அவர்கள் இருவரையும் ஈரோடு சென்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப்களையும் கைப்பற்றினர். பிறகு இருவரிடமும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இருவரையும் சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவரும் திருமணமான பெண்கள் மற்றும் கல்லுரி மாணவிகளிடம் இதே போன்று நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களை வைத்து மோசடி செய்து பணம் பறிப்பதோடு, அந்த பெண்களின் புகைப்படங்களை உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களுக்கு மார்பிங் செய்து அனுப்பிவிடுவேன் என்று தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளனர். எனவே பெண்கள் இது போன்ற பிரபலங்களின் புகைப்படங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் வரும் அழைப்புகளை ஏற்று ஏமாறாமல் இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் அனைத்து தரப்பு பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பி. ஜேம்ஸ் லிசா











