திருவள்ளூர் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் காந்திநகரில் சத்தியமூர்த்தி என்பவர் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தனியார் ஏல சீட்டு நடத்தும் நிறுவனத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் பொங்கல் பண்டிகைக்கான மளிகை மற்றும் நகைபண்டு திட்டத்தின் கீழ் மளிகை பொருட்களுக்காக 500 ரூபாயும், நகைக்காக மாதம் 1000 ரூபாயும் வசூலித்து வந்தார்.
கடந்த 12 மாதங்களாக பணம் கட்டியவர்களுக்கு பொருட்களை கூறியபடி முறையாக வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஏல சீட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 மாதங்கள் கட்டிய பணத்தையும் திரும்ப தருமாறு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் அதிக அளவில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்த சோழவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏல சீட்டு கட்டி உள்ள நிலையில் உரிய முறையில் பொருட்களை தராததால் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தாங்கள் செலுத்திய பணம் அல்லது அதற்குறிய பொருட்களை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.







