இயற்கை வளங்களை அழித்து காற்றாலைகள் அமைக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கன்னிவாடி பகுதியில் நீர்நிலைகள், சாலைகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி தனியார் நிறுவனம் சார்பில் 349 காற்றாலைகள் அமைக்கப்படுவதை எதிர்த்து சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காற்றாலை போன்ற இயற்கை எரிசக்தி திட்டம் நாட்டிற்கு அவசியம் என தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற திட்டங்களுக்காக, இயற்கை வளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலைகள் அமைக்கப்படுவதை ஏற்க முடியாது என கூறினர். இந்த வழக்கு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் காற்றாலை நிறுவனம் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.







