அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதல் காரணமாக, தமது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தங்கமணி, அவரது மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவலில், “முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிரான புகாரின் அடிப்படையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கர்நாடகா மாநிலத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல்லில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி தங்கமணி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக கூறுகின்றனர். அந்த கரன்சி பற்றி என்ன என்றே தனக்கு தெரியாத நிலையில், பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாக கூறினார்.. காலை முதல் இரவு வரை நீடித்த சோதனையின் முடிவில் தனது வீட்டிலிருந்து ஒரே ஒரு செல்போனை மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிச் சென்றதாக தெரிவித்தார்.
அதிமுக அமைச்சர்களை பழிவாங்கும் நோக்கிலும், அதிமுகவை அழிக்கும் நோக்கிலும் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், தன்மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்பட்டதாக கூறினார். சோதனை நடத்தியதற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.








