அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா உருவாகி 246 ஆண்டுகள் முடிவடைவதால், அந்நாட்டில் சிறப்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. மேலும் சுதந்திர தின விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு கண்கவர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அணிவகுப்பு தொடங்கியதும் அனைவரும் ஒருவர் பின் ஒருவர் மகிழ்ச்சியாக நடந்து சென்று கொண்டிருந்தனர், அப்போது, திடீரென மர்ம நபர் ஒருவர் அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த துயர சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் அணிவகுப்பை சாலையில் இருபுறமும் இருந்த பார்த்து ரசித்த பொதுமக்கள், துப்பாக்கி சூடு நடந்ததும் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
அணி வகுப்பு நடைபெற்ற போது, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் பெயர் ராபர்ட் கிரமோ என்பது தெரியவந்தது. அணிவகுப்பு நிகழ்ச்சியை சிதைப்பதற்காக வீட்டின் கூரைமீது நின்று துப்பாக்கி சூடு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பள்ளிகள், தேவாலயங்கள், மளிகைக் கடைகள் மீது நடத்தப்படும் தாக்குதலை தொடர்ந்து தற்போது சமூக அணிவகுப்புகள் மீதும் தாக்குதல் அரங்கேறுவதாகவும், அண்மை காலமாக கொலை வெறி தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.
– இரா.நம்பிராஜன்









