புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கொடுத்தாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலைவிட்டே விலகுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி புதுச்சேரியில் மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நாராயணசாமி, தம்மீது அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாவிட்டால், அரசியலை விட்டு விலக அவர் தயாரா என கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், எனவேதான், அவருக்கான மாளிகை இருந்தும், அமைச்சரவை கூடும் இடத்தில் ஆலோசனை நடத்தியிருப்பதாக விமர்சனம் செய்தார்.
கெரோனா பரவல் இருக்கும் நிலையில் யாரிடமும் ஆலோசனை கேட்காமல், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அவர் அறிவித்திருப்பதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.







