புதுச்சேரிக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து நாராயணசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனிடையே துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண் பேடியை மத்திய அரசு நீக்கியதுடன் தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சமீபத்தில் புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி யாரோ சொல்வதை மேடையில் பேசி உள்ளார். மக்களை திசை திருப்ப பொய்யான தகவல்களை அவர் கூறிவருவதாக குற்றம் சாட்டினார். மேலும், பண பலம், மற்றும் அதிகார பலத்தால் ஆட்சிக்கு வரலாம் என பாஜக நினைக்கிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்தார்.







