உ.பி.சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் உத்தரபிரதேச…

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் படிப்படியாக அந்த மாநிலத்தில் செல்வாக்கை இழந்து விட்டது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய மாநில கட்சிகள், பாஜக ஆகியவற்றுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் வெற்றி பெறவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க பிரியங்கா காந்தியை காங்கிரஸ் களம் இறக்கி உள்ளது. பிரியங்கா காந்தி இப்போது பெரும்பாலான நாட்கள் உத்தரபிரதேச அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிரியங்கா முன் வைத்து வருகிறார். குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னை, உபியில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் போன்றவற்றில் உ.பி. அரசுக்கு எதிராக பல போரட்டங்களை அவர் முன்னெடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று சென்றார். இன்று உபி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். ஆலோசனை கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:

“காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவோமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவோம். கூட்டணிக்கான வாய்ப்புகளை நாங்கள் மறுப்பதற்கு இல்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். எனவே இதர கட்சிகளும் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

நான் உத்தரபிரதேசத்துக்கு வரும்போது ஊடகங்கள் அது குறித்து கவனித்து செய்தி வெளியிடுகின்றன. நான் இங்கு வராதபோது காங்கிரஸ் குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவதில்லை. செய்திகள் வரவில்லை என்பதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உபியில் பணியாற்றவில்லை என்று அர்த்தம் அல்ல.

கொரோனா தொற்றின் போது வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவிற்கு அதிக பணிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். கடந்த 32 ஆண்டுகளாக உபியில் நாங்கள் ஆட்சியில் இல்லை. மிகவும் பலவீனமாக ஆகிவிட்டது. எனினும், அதில் இருந்து மீண்டு வர முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். உபியில் காங்கிரஸ் இப்போது பெரும் அளவுக்கு வலுப்பெற்றிருக்கிறது.

உபியில் காங்கிரஸ் சேவா தளத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவினர் என்னை சுற்றுலா அரசியல் வாதி என்று சொல்கின்றனர். நான் சுற்றுலா அரசியல்வாதி அல்ல. நானும், ராகுலும் அக்கறை உள்ள அரசியல்வாதிகள் அல்ல என்பது போல பாஜகவினர் பிரசாரம் செய்கின்றனர். அது உண்மையல்ல.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.