முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி.. திருக்குறுங்குடி கோயிலை திறக்க வனத்துறை அனுமதி

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலை திறக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும்.

ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் இந்தக் கோயில் திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து கோயிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 4 கி.மீ.தூரம் பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த கோயிலுக்கு வந்து நம்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 2ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக, கடந்த மே மாதம் தமிழகத்தில் கோயில்கள் மூடப்பட்டது. அதுபோல திருமலைநம்பி கோயிலும் மூடப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 5ம் தேதி முதல் வழிபாட்டு ஸ்தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், திருமலைநம்பி கோயிலை திறக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அடுத்த சில மணி நேரத்திற்குள், கோயிலை திறக்க வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நாளை முதல் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

தென்னாப்பிரிக்காவில் தொடர் வன்முறை: 70க்கும் மேற்பட்டோர் பலி

Gayathri Venkatesan

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு? நாளை முதல் கருத்துக் கேட்பு கூட்டம்!

Saravana

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Gayathri Venkatesan