அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்சத்தை மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரை விழுப்புரம் குற்றவியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விக்கிரவாண்டியை அடுத்த கடையம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான குணசேகரன் என்பவருக்கும் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரான ரமேஷ் பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ரமேஷ் பாபுவின் சித்தியான முன்னாள் அமைச்சர் சரோஜா மூலம் சத்துணவு பொறுப்பாளர், அங்கன் வாடி பணியாளர், கிராம உதவியாளர் பணி பெற்று தருவதாக கூறி பணம் கேட்டுள்ளார். அதனை நம்பி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ரமேஷ்பாபு, அவரது முதல் மனைவி சூரியவர்ஷினி, 2-வது மனைவி ரேவதி, ரமேஷ்பாபுவின் மாமா சவுந்தர்ராஜன் ஆகியோரின் வங்கி கணக்கிலும், நேரடியாகவும் குணசேகரன் 35 பணம் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு பணத்தை பெற்ற ரமேஷ்பாபு கடந்த 2 ஆண்டு காலமாக 17 பேருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் குணசேகரன், பலமுறை ரமேஷ்பாபுவை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் 17 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படியும், இல்லையெனில் தான் ,கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படியும் கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ்பாபு, அவர்கள் 17 பேருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமலும் இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.
இதனால் பாதிப்படைந்த குணசேகரன் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் ரமேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், ரமேஷ்பாபுவை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.







