நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று சொல்ல வேண்டும். அது எத்தனை கோடி போட்ட படமாக இருந்தாலும் சரி. ரசிகர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கேட்டு கொண்டுள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்
வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன், நடிகை கோவை சரளா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், வசந்த பாலன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “பிரபு சாலமனை வைத்து வேல்ஸ் ஃபில்ம் நிறுவனம் படம் பண்ண வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால் அது அமையவில்லை. கண்டிப்பாக அவரை வைத்து படம் எடுப்போம். அதை இங்கேயே கேட்டு விடுகிறேன். கண்டிப்பாக கோவை சரளா அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ”இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. கமல் சப்போர்ட் இருந்தால் யாரும் சோடை போக மாட்டார்கள். அதற்கு நானே ஒரு மிகப்பெரிய சாட்சி. 32 வருடமாச்சு நான் இயக்குநராகி. என்னை தெனாலி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆக்கியது கமல் சார் தான். அதனால் தான் இன்று வரை சிறிய சிறிய படங்களை நான் தயாரித்து வருகிறேன்” என்றார்.
பின்னர் பேசிய செம்பி திரைப்படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், ”அஸ்வின் எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படுவார். இந்த படம் அஸ்வினை ஒரு சரியான தளத்திற்கு கொண்டு போகும் என நினைக்கிறேன். ஒரு கலைஞனை உருவாக்குகிற நடிகராக கமல் இருக்கிறார். அவர்களை பற்றி பேச வார்த்தை இல்லை. மிக்க நன்றி சார்” என்றார்.
அடுத்து பேசிய நடிகர் கமல்ஹாசன், “நல்லா இருக்கிற படத்தை நல்லா இருக்கிறது என்று சொல்ல வேண்டும். நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று சொல்ல வேண்டும். அது எத்தனை கோடி போட்ட படமாக இருந்தாலும் சரி. அதை ரசிகர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். ரசனையை வளர்ப்பது என்னுடைய கடமையாக நான் நினைக்கிறேன்.
நல்ல படங்களை எடுங்கள். நான் தோளில் இருந்து கை எடுக்க மாட்டேன். என்னை பார்த்து நடிக்க கற்று கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் வேண்டாம். நான் பலரை பார்த்து வியந்து வருகிறேன். நான் எல்லாம் past. என்னால் செய்ய முடியாதது நிறைய உள்ளது. கற்று கொள்வதை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்.
சதிலீலாவதி படத்தில் எனக்கு குரு சரளா. தசாவதாரம் படத்தில் இருந்த ஒரு காட்சிக்கு எனக்கு குரு என்னுடைய மகள். அதற்கு சாட்சி இயக்குநர். அவரும் இங்கு தான் உள்ளார். தெனாலி படம் எடுக்கும் போது, ஆரம்பத்தில் இருந்த பதற்றம் எல்லாம், முடிக்கும்
போது இல்லை. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.







