சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் பறிமுதல்-2 பேர் கைது

சென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.37.39 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்கத் துறை பறிமுதல் செய்து, கடத்தல் பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை செய்தனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும்…

சென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.37.39 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்கத் துறை பறிமுதல் செய்து, கடத்தல் பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் (30), அக்பர் (26) ஆகிய இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சுற்றுலாப் பயணிகள் விசாவில் துபாய்க்கு செல்ல வந்திருந்தனர். இவர்களை சுங்க அதிகாரிகள் நிறுத்தி அவர்களுடைய உடமைகளை சோதனையிட்டனா்.

அதோடு அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தபோது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த, கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சி வெளிநாட்டுப் பணங்களை கண்டுபிடித்தனர். அதோடு இருவரின் கைப் பைகளிலும் வெளிநாட்டு பணங்கள் இருந்தன. அதையும் பறிமுதல் செய்தனா்.

இரண்டு பேரிடம் இருந்தும் ரூபாய் 37.39 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து இரண்டு பேரின் துபாய் பயணத்தையும் ரத்து செய்தனர். இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர். இவர்களிடம் இந்த பணத்தை கொடுத்து அனுப்பிய நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.