“யாருக்காக…இந்த மாளிகை வசந்த மாளிகை”

தமிழ்நாட்டை தாண்டி, இலங்கையில் முதன்முதலாக வெள்ளிவிழா கண்ட தமிழ்த்திரைப்படம்… தொடர்ந்து அரங்கு நிறைந்து 271 காட்சிகள் ஓடி சாதனை படைத்த திரைப்படம் சிவாஜி நடித்த வசந்த மாளிகை.. ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் ‘சக்கரவர்த்தியடா!’…

தமிழ்நாட்டை தாண்டி, இலங்கையில் முதன்முதலாக வெள்ளிவிழா கண்ட தமிழ்த்திரைப்படம்… தொடர்ந்து அரங்கு நிறைந்து 271 காட்சிகள் ஓடி சாதனை படைத்த திரைப்படம் சிவாஜி நடித்த வசந்த மாளிகை..

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் ‘சக்கரவர்த்தியடா!’ என வரும்போது, மொத்தத் திரையரங்கமும் அதிர்ந்து, சிவாஜி ரசிகர்களால் ஆர்ப்பரிக்கப்பட்ட திரைப்படம் வசந்த மாளிகை… திரைப்படத்தின் பூஜை முடிந்தவுடன் முதல் நாளே காலை 4 மணிக்கு ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்’ பாடலின் படப்பிடிப்பு தொடங்கி, மொத்தம் மூன்று மணிநேரத்தில் முழுப் பாடலும் எடுத்து முடிக்கப்பட்டது…

வசந்த மாளிகை திரைப்படத்தில் கதாநாயகியாக ஜெயலலிதா நடிக்க முதலில் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவரது தாயார் மறைவு காரணமாக நடிக்க இயலாமல் போக, வாணிஸ்ரீ நடித்தார். 1971ம் ஆண்டு தெலுங்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் தமிழாக்கம், பிரமாண்டமாக மாளிகை போன்ற செட் அமைத்து படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் கண்ணாடி அறை அந்தக்காலத்தில் பிரமிக்க வைத்தது. கே.வி.மகாதேவன் இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. அடியம்மா ராசாத்தி என்ற பாடல் படம் பிடிக்கப்பட்ட நிலையில் திரைப்படத்தில் இடம்பெறாமல் போனது.

தமிழ்நாட்டில் 10 ஊர்களில், 12 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி நிறைவு செய்த வசந்தமாளிகை. சென்னையில் 3 திரையரங்குகளில் தொடர்ந்து, அரங்கு நிறைந்த 271 காட்சிகள் ஓடி சாதனை படைத்தது. மதுரையில், சிவாஜியின் பல திரைப்படங்களுக்கு மத்தியிலும் வசந்தமாளிகை 200 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டு திரையரங்குகளில் மொத்தம் 750 நாட்கள் ஓடி பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இலங்கையிலும் வசந்தமாளிகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.யாழ்ப்பாணத்தில் உள்ள வெலிங்டன் என்ற திரையரங்கில் படம் ரிலீஸ் ஆன நிலையில், கூட்டம் அலைமோதவே, அருகிலுள்ள லிடோ என்ற திரையரங்கிலும் திரையிடப்பட்டது. ஒரு பிரிண்ட் மட்டுமே இருந்த நிலையில் காரில் படச்சுருளை கொண்டு சென்று மாறி மாறி திரையிட்டனர். யாழ்ப்பாணம் திரையரங்கில் 207 நாள் ஓடி முதல் வெள்ளிவிழா கண்ட தமிழ்ப்படம் வசந்த மாளிகை..

ஆண்டுகள் பல கடந்தும் அசையாத கோட்டையாக இன்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கிறது வசந்த மாளிகை..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.