பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் கடந்த இரண்டு வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி5,936 நபர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருநாள் மட்டும் 943 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பாதித்த நபர்களில் 5,264 பேர் வீட்டுத் தனிமையிலும், 57 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







