“நாட்டிலேயே முதல் முறையாக AI ஊழல் செய்துள்ளது திமுக” – அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!

நாட்டிலேயே முதல் முறையாக AI பயன்படுத்தி ஒரு மாபெரும் ஊழலை திமுக செய்துள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரத்தில், கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் மேலும் பல தரவுகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் ராஜ் மோகன் திமுக ஆட்சியில் அகல்விளக்கு பதிப்பகத்திடம் ஏழு நாட்களுக்குள் புத்தகங்களை வாங்குவதற்கு பர்சேஸ் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி ஆதாரங்களையும் வெளியிட்டார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்த பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“பெரியார் அறிவுலகம் விவகாரத்தில், இந்த நாட்டிலேயே முதல் முறையாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் ஊழலை திமுக செய்துள்ளது

அகல்விளக்கு பதிப்பகத்தில் புத்தகங்களை வாங்குவதற்காக 2026 பிப். 14ஆம் தேதி திமுக ஆட்சியில் பர்ஜஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அகல்விளக்கு பதிப்பகத்திடம் ஏழு நாட்களுக்குள் புத்தகங்களை வாங்குவதற்கு பர்சேஸ் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது, அதனுடைய நகல்தான் இது. திமுக சார்பாகப் பேசும் ஊதுகுழல்களுக்குத் தெம்பும் திராணியும் இருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள்!

அகல்விளக்கு பதிப்பகத்தில் புத்தகங்களை வாங்குவதற்காக 2026 பிப். 14ஆம் தேதி திமுக ஆட்சியில் பர்ஜஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால், சீல் குத்திய புகைப்படங்களைக் காண்பித்து, கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாத திமுகவின் ஊதுகுழல்கள் வெட்கமின்றி அவதூறு பேசுகிறார்கள்

பெரியார் அறிவுலகத்தோடு முடிந்துபோகும் ஸ்கேம் இல்ல இது; ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட இந்த குப்பைகளைத் திறக்கத் தயாராக உள்ள திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், நெல்லை காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய ஒவ்வொரு நூலகத்திற்கும் தலா ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இதுமட்டுமின்றி, ஆன்லைனில் வாங்கக்கூடிய மின்நூல்களுக்கு ரூ.5 கோடி எனத் திட்டமிட்டு, திமுக ஆட்சியில் ஒரு பெரிய ஸ்கேம் அரங்கேறியுள்ளது

விஜய், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான எழுத்தாளர்களின் பெயர்களில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன; வேதனையோடு சொல்கிறேன், தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திமுக ஆட்சியில் டிஜிட்டல் கரையான்கள் அழித்துள்ளன” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.