மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக கவனகுறைவாக சிகிச்சை அளித்ததாக கூறி இரண்டு மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு 304A என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா. கால் வலியால் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்ததோடு, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு பிரியாவின் கால் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் மருத்துவர்களின் அலட்சியமே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும் காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் பிரியா குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வீடு ஒதுக்கியதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரியா வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோரிடம் வழங்கினார். இந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் மற்றும் சிலர் மீது ஏற்கனவே 174 என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது கவன குறைவாக செயல்பட்டதால் மரணம் விளைவிக்க காரணமாக இருந்ததாக கூறி மருத்துவர்கள் இரண்டு பேர் மீது 304 A என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கை மாற்றியுள்ளனர். இரு மருத்துவர்களும் தலைமறைவாக இருப்பதால், அவர்களது வீடுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.