திருவாரூர் மாவட்டத்தில் உணவுப்பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், முதலமைச்சரின் திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுவதால் வைக்கோல் மிகப்பெரிய அளவில் கிடைக்கின்றது எனவும், அங்கு வைக்கோலிலிருந்து காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்டா மாவட்டங்களில் காகித தொழிற்சாலை அமைப்பதில் சிக்கல்கள் உள்ளன என குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் உணவுப்பூங்கா அமைக்க சாத்தியக்கூறு உள்ளதால், அதனை அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். மேலும், வாழை மரப்பட்டைகள், நார்களை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்றும், வாழையை வைத்து உலகளாவிய சந்தையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்த அவர், தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க முன்வந்தால் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








