ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் ஷவர்மா கடைகளில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததில் 35 கிலோ அளவிலான தரமற்ற சிக்கனை பறிமுதல் செய்துள்ளனர்.
இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள உணவு பொருள் ஷவர்மா. அண்மையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் தமிழ்நாட்டில் தஞ்சை, மதுரை போன்ற இடங்களில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருவள்ளூர் மாவடத்திற்குட்பட்ட ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷாவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஷவர்மாவிற்கு பயன்படுத்த படும் தரமற்ற 35 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாலிதீன் பைகள், செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், தரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement: