தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவா..? – அதிமுக கடும் கண்டனம்

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

அதிமுகவின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். சமீபத்தில், “தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்” என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் முதல்வர். இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய முதலமைச்சர். ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுகவை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.