தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக…

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக பள்ளிகளில் பொது தேர்வுகள் முடிந்து மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாதம் முதல் தேதியில் பள்ளிகள்  மீண்டும் திறக்கப்படும். அதேபோல நடப்பு ஆண்டிலும், ஜூன் 1-ம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் வரலாறு காணாத அளவில் தமிழகம், புதுச்சேரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் என அனைவரும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பதை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியார்களை சந்தித்த அவர், ”புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.