“Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!” – மு.க.ஸ்டாலின்

மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறையில் வலிப்பு வந்ததாக நடித்து காவலர்களை தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.

புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.

ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.

மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.