“பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுங்கள்” – கேரள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்!

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“மாநிலத்தில் கனமழை தொடர்கிறது. மழையுடன் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, மலப்புறம் கேரள கர்நாடக கடற்கரையில் ஜூன் 1ம் தேதி வரையிலும், லட்சத்தீவு கடற்கரையில் ஜூன் 3ம் தேதி வரையிலும் மீன்பிடிக்க அனுமதி இல்லை என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 59 முகாம்களுக்கு 1296 பேர் இடம் பெயர்ந்தனர். 72 வீடுகள் முழுவதும், 3046 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளன.

பலத்த மழை பெய்து வரும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.