திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 4% குறைப்பு – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நாசர்!

திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 4 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ் திரைப்படத்துறையினர்களின் கோரிக்கையை ஏற்று, திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு வெளியிடப்படும் தமிழ் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 8% இருந்து 4% ஆக குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வரிக் குறைப்பிற்கு வழி அமைத்துத் தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவிக்கிறோம். தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிர்கொண்டு வரும் மிக கடினமான காலகட்டத்தில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரும் சுமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் அலைபேசி வாயிலாக செயலிகளில் திரைப்படங்களை காணப் பழகி வரும் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல முகாந்திரமாகவும் இது அமையும் என்று நம்புகிறோம்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.