நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் 45 பறக்கும் படைகளை அமைத்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம். தனி நபர் ரூ.50,000 வரை கொண்டு செல்லலாம். பேரணி, தெருமுனைக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு மட்டும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும்படி பறக்கும் படைகளுக்கு உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், பரிசுப்பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
Advertisement: