சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற மலர்க் கண்காட்சியை சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தோட்டக் கலைத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் முதன்முறையாக மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சிக்காக 200க்கும் அதிகமான வண்ணமலர்கள் அரங்குக்கு கொண்டு வரப்பட்டன. கண்காட்சியில் மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உருவங்கள், செல்ஃபி எடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், மலர் வளைவுகள், மலர் தொட்டிகளில் வண்ண மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்ட கோப்பை ஆகியவை தயார் செய்யப்பட்டிருந்தன.
கலைவாணர் அரங்கில் சிறந்த புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரம்மாண்ட மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 50 , மாணவர்களுக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கலைவாணர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மலர்க் கண்காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 3 நாட்களில் சுமார் 45 ஆயிரம் பேர் கண்காட்சியை கண்டுகளித்துள்ளனர். இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மலர்க் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். கண்காட்சியின் மூலம் சுமார் ரூ. 20 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-ம.பவித்ரா







