நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543இல் இருந்து 846ஆக உயர்த்தும் பணியை மத்திய அரசு, குடியரசு தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொடங்கும் எனத் தெரிகிறது.
வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 846 ஆக உயர்த்த மத்தியில் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய உருவாக்கியுள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.889 கோடியாகும். முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். கிடப்பில் இருந்த இத்திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் ஆயிரம் எம்.பி.க்கள் வரை அமரும் வகையில் இடவசதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543ல் இருந்து 846ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் முன்பாக தீவிர பொது விவாதம் அவசியம் என காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களாக கூறி வருகிறது. மேலும், இதை எதற்காக செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் மாநில சட்டப்பேரவைகளை கலைப்பது உட்பட அரசியல் சட்டம் வழங்கியுள்ள பல அதிகாரங்களை செயல்படுத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதுபோன்ற சூழலில் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஐயத்தையும் காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியுள்ளது.
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் அதற்குள் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மனீஷ் திவாரி ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ல் இருந்து 49ஆக உயர வாய்ப்புள்ளது எனவும், புதுச்சேரியின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதே ஒன்றாகதான் இருக்கும் எனக் கூறுகின்றனர்.
அதிக மக்களவை உறுப்பினர்கள் உள்ள உத்தரபிரதேசத்தின் எண்ணிக்கை 80 இல் இருந்து 143 ஆக உயரும் எனத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீரில் 8 உறுப்பினர்களும், லடாக்கில் ஒரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
பீகாரில் இருந்து 79 உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் எனத் தெரிகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 76 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என கூறப்படுகிறது. ராஜஸ்தானில் இருந்து 50 பேரும், குஜராத்தில் இருந்து 43 பேரும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து 54 பேரும், கர்நாடகாவில் இருந்து 41 உறுப்பினர்களும், கேரளாவில் இருந்து 20 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு தேர்வாவர் எனத் தெரிகிறது. ஆக மொத்தம் நாடு முழுவதிலிருந்தும் 846 உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்வாவர் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பூர்வாங்க பணி குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொடங்கும் எனத் தெரிகிறது. ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் சராசரியாக 12 லட்சம் வாக்காளர்கள் இடம் பெறுவர் எனத்தெரிகிறது. இது வரும் 2024 ஆம் ஆண்டுக்கான தோராய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.
இராமானுஜம்.கி









